My Articles(vathany)

From WikiEducator
Jump to: navigation, search

புதிய நெல் வர்க்கங்களின் செய்கை

உலகில் பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை நெல் உற்பத்தியில் பயிர்ச்சீர்திருத்தத்தினை எடுத்து நோக்கும் போது 1960 களில் அறிமுகமான முதலாவது கலப்பினங்களாக H4 மற்றும் IR-8 போன்ற வர்க்கங்களில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேற்றமடைந்து தற்போது அதி உயர் விளைவு தரக்கூடிய கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது யாழ் குடாநாட்டில் உற்பத்தி செய்யும் நெல்லானது இரண்டு அல்லது மூன்று மாதங்களிற்கே போதுமானதாக உள்ளது. பயிர்ச் சீர்திருத்தம் தொடர்ந்தும் நடைபெற்று புதிய வர்க்கங்கள் பிறப்பாக்கப்பட்டு வருவதனால் காலத்தின் தேவைக்கேற்ப புதிய வர்க்கங்களை செய்கை பண்ணவேண்டியமை தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது.

யாழ் குடாநாட்டில் எவ்வாறு நெல் உற்பத்தியை அதிகரிக்கலாம், எவ்வாறான புதிய உத்திகளைப் பயன்படுத்தலாம், யாழ்ப்பாணத்தில் செய்கைக்கு பாவிக்கப்படும் நெல் வர்க்கங்கள் யாது? அவற்றின் இயல்புகள் யாது? இயல்புகளிற்கேற்ப குடா நாட்டின் எவ்வெப் பகுதிகளில் எவ்வகையான புதிய வர்க்க நெல்களைப் பயிரிடலாம் போன்ற பல்வேறு விடயங்களையும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்காக அமையும்.

பாரம்பரிய இனங்களில் நுகர்ச்சியாளரால் விரும்பக்கூடிய சுவை, மணம், சமையல் தரம் போன்ற சிறந்த பண்புகள் காணப்பட்டாலும் அதிகரித்துவரும் சனத்தொகைகடகேற்ப புதிய உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வல்லமை இப்பாரம்பரிய இனங்களிற்கு இல்லாத காரணத்தால் நாம் அதிகூடிய விளைவுதரக்கூடிய இனங்களிற்கு மாற வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது.

இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் நெற்செய்கையை எடுத்து நோக்கும் போது யாழ்குடாநாட்டு நெற்செய்கையானது 100 வீதம் மழையை நம்பியே செய்கை மேற்கொள்ளப்படுவதனால் ஏனைய மாவட்டங்களை போன்ற வர்க்கங்களை இங்கு சிபாரிசு பண்ணமுடியாத நிலை காணப்படுகின்றது. ஆகவே யாழ் குடாநாட்டின் மண்வகைகள், நீர்வளம் போன்றவற்றிற்கேற்ப வர்க்க சிபாரிசுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

யாழ் குடாநாட்டின் கடந்த போக (2007/2008) நெற்செய்கையினை நோக்கின் 5090 ஹெக்ரயரில் புதிய திருந்திய இன வர்க்கங்களுடன் 3494 ஹெக்ரயரில் பாரம்பரிய வர்க்கங்கள் விதைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இனங்களின் பரம்பலுக்கு அடுத்தபடியாக AT 402, BG 406 மற்றும் AT 353 ஆகிய வர்க்கங்கள் கணிசமான பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டில் தற்போது செய்கை பண்ணப்பட்டுவரும் திருந்திய வர்க்கங்களுடன் இம் மூன்று வர்க்கங்களும் ஒப்பீட்டளவில் அதிக விளைவை கொடுத்துள்ளன. ஆயினும் AT 402 வர்க்கத்தினை நோக்கும் போது இலங்கையில் செய்கை பண்ணப்படும் மொத்த நெற்பரப்பில் இவ்வினம் 0.04% மாத்திரம் செய்கை பண்ணப்படுகின்றது. இவ்வினத்தில் உள்ள பல பின்னடைவான இயல்புகள் காரணமாக ஏனைய மாவட்டங்களில் கைவிடப்படும் நிலையில் உள்ளதால் இவ்வினத்திற்கான விதை உற்பத்தித்திட்டமும் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

மேலும் யாழ் குடாநாட்டிலும் AT 402 வர்க்கம் பல இடங்களில் நெற்பழ நோயினால் (smut disease) அதிகளவு பாதிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இனி வரும் காலத்தில் சிறந்த விளைச்சல் தரக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மையுள்ள இனங்களை தெரிவு செய்து பயிர்ச்செய்கை செய்வது சாலச்சிறந்தது.

யாழ் குடாநாட்டில் புதிய, பழைய நெல்வர்க்கங்களின் பரம்பலை நோக்கின் பழைய வர்க்கங்கள் 40% இலும் திருந்திய இனங்கள் 60% இலும் செய்கை பண்ணப்படுகின்றது. யாழ்குடாநாட்டில் பிரதேசங்களின் சூழல் வேறுபாட்டிற்கு ஏற்ப செய்கை பண்ணப்படும் வர்க்கங்களின் பரம்பலை நோக்கும் போது பாரிய வேறுபாடுகளை கீழுள்ள வரைபிலிருந்து அறியலாம். இதிலிருந்து யாழ் குடாநாட்டில் பல்வேறு வர்க்கங்களின் பரம்பலையும் பாரம்பரிய இனங்களின் பரம்பலையும் தெளிவாக அறியலாம்.

தொல்புரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் நடைபெற்ற வயல் விழா
தொல்புரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் செய்கைபண்ணப்பட்ட AT 507
உடுவில் விவசாய போதனாசிரியர் பிரிவில் செய்கைபண்ணப்பட்ட BG 406